எழுத்தின் அளவு: அ+ அ- அ
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த வாக்குப்பதிவு நிறைவுபெற்றது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 46 வேட்பாளர்கள் களம் கண்டுள்ளனர். ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 636 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 760 பெண் வாக்காளர்களும், 37 பிற பாலினத்தவர்கள் என மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 433 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றனர். மொத்தம் 53 இடங்களில் உள்ள 237 வாக்கு சாவடி மையங்களில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது.
காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர். மாலை 5 மணிநேர நிலவரப்படி 64 புள்ளி 02 சதவீத வாக்குகள் பதிவுகாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. விரைவில் இடைத்தேர்தலில் பதிவான மொத்த வாக்கு சதவீதம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று பதிவான வாக்குகள், வரும் 8ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட உள்ளது.
இதனிடையே, செய்தியாளர்களை சந்தித்த பாஜக எம்.எல்.ஏ. சரஸ்வதி, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மக்களிடையே வரவேற்பு இல்லை எனவும் மீண்டும், மீண்டும் தேர்தல் நடைபெறுவதால் மக்கள் உணர்வுடன் வாக்களிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
ஈரோடு வளையக்காரன் வீதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் வாக்கு செலுத்தவந்த பரிதா பேகம் என்பவரது வாக்கு, ஏற்கெனவே செலுத்தப்பட்டடாக தெரிவிக்கப்பட்டதால், அந்த பெண் அங்கிருந்த தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தனது வாக்கினை மற்றவர்கள் எவ்வாறு செலுத்த முடியும் எனவும், முறைகேடுகளை கண்டறிந்து மீண்டும் வாக்களிக்க ஏற்பாடு செய்ய வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார்.